Thursday, October 22, 2015

கல்லூரி விடுதி கேரக்டர்கள்!!

கல்லூரி விடுதி கேரக்டர்கள்!!

'என் நட்பு! என் உரிமை!' என
'கடலை ஒழிப்பு'ப் புரட்சிப் போராட்டம் நடத்தும் ஒருவன்
'என் பணம்! என் அண்ட்ராயர்!' என
இடுப்பில் நிற்காத கால்சட்டையோடு திரியும் ஒருவன்
அசதியின்றி நள்ளிரவிலும் ஒரு வாளி துணிதுவைத்து
சோப்பு நுரையோடு காலம் தள்ளும் ஒருவன்
பெசன்ட் நகரில் பஜ்ஜி மென்றுகொண்டே
கடல் நுரையில் கவிதை தேடும் ஒருவன்
கணக்கு நன்றாக வருமென்று CAT கிளாஸ்  போகும் ஒருவன்
கணக்கு பண்ணப் பின்தொடர்ந்து G.R.E கிளாஸ் போகும் ஒருவன்!!

வகுப்புக்குப் போகாமல் விடியவிடிய படம் பார்த்தாலும்
பரீட்சையில் படங்காட்டி முதல் மதிப்பெண் எடுக்கும் ஒருவன்
பகுத்துத் தொகுத்து வகைவகையாய் வகுப்புக்குறிப்புகள் எடுத்தாலும்
பல்லிளிக்கும் வினாத்தாளைப் பார்த்ததும் கோட்டைவிடும் ஒருவன்
பிங்க் ஃபிலாய்ட்-டையும் பியர்-ஐயும் சிலாகிக்கும் ஒருவன்
தேனிசைத் தென்றலிலும் தேநீரிலும் சுகங்காணும் ஒருவன்
நான்காம் ஆண்டின் இறுதித் தேர்வில் கூட
நான்கு வண்ண பேனாக்களோடு விடை எழுதும் ஒருவன்
இன்ஜினியரிங் டிராயிங்கைக் கூட, குரூப் செல்ஃபி-இல்
முன்னால் நிற்பவன் முகம்போல் அஷ்டகோணலாய் வரையும் ஒருவன்!!

ஆங்கில சீரியல் பார்த்து அறையில் தனியாய் சிரிக்கும் ஒருவன்
அங்குல அங்குலமாய் நடிகை படத்தைப் பார்த்து ரசிக்கும் ஒருவன்
கவலையின்றி ஓரம் அமர்ந்து LAN GAMING 'மிக்சர்' தின்னும் ஒரு கும்பல்  
கல்லூரி தேர்தலே வாழ்க்கையென்று கவலையோடு திரியும் ஒரு கும்பல்
நிஷா, உஷா, எந்த ஸ்திரீ பின்னாலும் சுற்றும் ஒருவன்
ஈஷா யோகா, ஸ்ரீஸ்ரீஸ்ரீ என சுயதேடலில் பற்றுள்ள ஒருவன்
'மிளகாய் பஜ்ஜியா? வாழைக்காய் பஜ்ஜியா?' முடிவெடுக்க முன்னூறு ஆராய்ச்சி செய்யும் ஒருவன்
மெஸ் உணவைக் கூட மூன்று முறை கேட்டு வாங்கி உண்ணும் ஒருவன்
தொலைக்காட்சி அறையிலேயே குடித்தனம் நடத்தும் ஒருவன்
குளியல் அறையை வாரமொரு மட்டுமே பார்க்கும் ஒருவன்!!

அடையாள அட்டையை பிடுங்கிச் சென்று
அம்பது ரூபாய் அபராதம் விதிக்கும் 'டீன்'
அயராது இம்சிக்கும் 'தனி ஒருவன்'!!

Saturday, October 10, 2015

பெங்களூர் நாட்கள்!! (Bangalore Days!!)

பெங்களூர் நாட்கள்!! (Bangalore Days!!)

மடிப்பு கலையாத சட்டை
மார்போடு அடையாள  அட்டை
வீதியில் கால்வைத்தால் ஏறி மிதிக்கும் வாகன  நெரிசல்
வீட்டுக்கு வந்து கண்ணாடி பார்த்தால் முகமெல்லாம் கரிசல்
யாரென்று தெரியாத எதிர் வீட்டு மாந்தர்
'பார்'என்று  உரக்கச் சொல்லும் தாராளமய மாதர் ;)
வாரநாட்களில் மேலாளரிடம் முதல்தர வேசம்
வார இறுதியில் காடு, மலைகளில்  பிரவேசம்
அடுப்பங்கரையில் சாராயம் காய்ச்சும் ப்ரூ 'பப்'கள்
துடுப்பில்லாப்  படகாய் சுற்றும் வயதினரின் 'பில்ட்-அப்'கள்
கோடையிலும் விடாது குளிர்விக்கும் வருண பகவான்
சோடை போகாத வானிலையில் மலைகளுக்கு சகவான்
பலவித மணம்கொண்ட மலர்களின் மாலை
பல ஊர் மக்களின் கலகலப்பான சோலை!! 

Tuesday, April 28, 2015

ரயில் பயணங்களில்...

ரயில் பயணங்களில்......
நெடுந்தூரத்  தொடர் வண்டிப் பயணம்
அடுத்தநாள் வரை ஆனந்த சயனம்
இச்சையூட்டும் குழந்தைகளுடன் இனிய அரட்டை
இம்சையூட்டும் பக்கத்து இருக்கைக்காரரின் குறட்டை
முன்பதிவு அட்டையில் மங்கைபெயர் தேடல்
பின்கதவைத் திறந்தால் பணியாளரின் சாடல்
படியில் அமர்ந்து பாலத்தைக் கடக்கும் சுகம்
நொடியில் கடக்கும் 'நில்லாத நடைமேடை' முகம்
பெயர்தெரியா ஊர்களின் வனப்பைக் காட்டும் சாளரம்
அயர்வறியாது குதித்தோடி ரசிக்கும் மனமென்னும் வானரம்
தனிருசி கொண்ட தொடர்வண்டி உணவு
பனிக்கூழ் உண்ணக்கூட தேவை  தினவு
விரைவாகச் செல்ல உதவும் விமானம்
தருவதில்லை இத்தனை இனிய வெகுமானம்!! 

Wednesday, March 4, 2015

முடிச்சவிக்கி (ஓர் அப்பாவும் சில கவலைகளும்)

முடிச்சவிக்கி 
(ஓர் அப்பாவும் சில கவலைகளும்)

➠தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று - நகைச்சுவையில் கூட கரைச்ச புளியையே கரைப்பது (எத்தனை நாள் தான் அரைச்ச மாவையே அரைப்பது?) காக்கிச் சட்டை, தொப்பி போட்ட  போலீசை வாட்ச்மேன் என்று கலாய்ப்பது அல்லது கிண்டலடித்து உதை வாங்குவது - இந்த காட்சி இடம்பெறும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ரூபாய் என்று வசூலித்திருந்தால் கூட மருதநாயகம் பட பட்ஜெட்டுக்குத் தேவையான பணம் கிடைத்திருக்கும். அந்த காக்கி லிஸ்டில், காலையில் வீடுதோறும் குப்பை அள்ளவும், சாக்கடைகளை சுத்தம் செய்யவும் காக்கிச் சட்டை, லத்தி போன்ற குச்சி, விசில் சகிதம் போலீஸுக்கு  இன்னும் நெருக்கமான கெட்டப்பில் வளைய வரும் துப்புரவுத் தொழிலாளர்களையும் சேர்க்கலாம் போல.

அன்றும் வழக்கம் போல் ஒவ்வொரு வீட்டின் முன்பும் விசில் அடித்து அழைத்து, குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர் கவிதாவும் டேனியலும். குமார், குப்பை அள்ளும் வண்டியை தெரு முனையில் நிறுத்தி அவர்களுக்காகக் காத்திருந்தான். அது தான் அன்றைக்கான கடைசி தெரு. குப்பைகளை அள்ளி வண்டியில் கொட்டிவிட்டு, சலிப்புடன் வந்து குமார் பக்கத்தில் அமர்ந்தான் டேனியல். 

"சே! என்ன பொழப்பு டா இது? தெனமும் சாக்கடைய குத்திகினு, தொடப்பத்த தூக்கினு சுத்திக்கினு. நாய்ப்  பொழப்பு"

"டேய்! தொடப்பத்தப்  பத்தி தப்பா பேசாத. டெல்லில தொடப்பம் தான் ஆட்சிய புட்சிகிது. பாத்த இல்ல?"

"அண்ணோவ்! இதுலாம் உனுக்கே ஓவரா தெர்ல? என்னமோ போ. எங்க அம்மா அப்பவே சொல்லிச்சு. பத்தாவது வரைக்குமாவது ஒழுங்கா ஸ்கூலுக்கு போடா னு. கேட்டா தான?"

"ஐன்ஸ்டீன் இன்னா தெரியுமா சொல்லிகிறாரு?  நீ ஸ்கூல் ல பட்ச அல்லாத்தையும் மறந்த பிற்பாடு உன்னாண்ட மிச்சம் இருக்கற்து  தான் 'கல்வி'யாம். தினத்தந்தில பட்சேன் "

"இப்டியே பேசினு இரு. ஆனா உனுக்கு எப்டி ணா இவ்ளோ மேட்டர் தெர்து? ஸ்கூல்ல லாம் செமயா பட்சிருப்ப போல?" நக்கலாக சிரித்தான்.

"ஏய் நெக்குலா (நக்கலா)? மவனே. அஞ்சாப்பு, ஆறாப்பு வரைக்கும் ஃபஷ்டு ரேங்க் லாம் எட்துக்கிறேன்"  

"மெய்யாலுமா? அப்றம் எப்டி இப்டி?"

"திமிர் தான். அஞ்சாப்பு படிக்கொ சொல்லோ, கிளாஸ்ல  புள்ளைங்க லாம் படிய தல சீவிக்கினு, நல்லா படிக்கிற பசங்கள லுக் வுட்டுச்சுங்க. பாத்தா சிரிக்கும். பேசும். அண்ணனும் அதுக்காண்டி பட்சேன். 'டப்'புனு எட்டாப்பு வந்த ஒடனே, கிர்தா ல லைன் போட்டவன், தலைய சீவிட்டு கலைச்சு விட்டவன், சட்டையை பாதி இன் பண்ணி பாதி வெளிய உட்டவன், வாத்தியார மொரைச்சவன் லாம் புள்ளைங்க முன்னாடி ஹீரோ ஆய்ட்டான். அப்டியே ஆரமிச்சு, 'ஏரியா கெத்து' 'அரசியல்'னு லாம் கனவு கண்டு, ஊருக்குள்ள நம்ம மூஞ்சி எல்லா பிரச்னைலயும் பாப்புலரா இருக்கணும்னு பக்கத்து தெரு ஐ.டி.ஐ-லயே சேந்து, ரெண்டு வருஷத்துக்கு ஒரு வேல மாறி, தோ இப்போ இங்க இருக்கிறேன். யாரையும் ஏமாத்தாம சம்பாதிக்கிற எந்த வேலயும் நல்ல வேல தான். இன்னா ஒண்ணு. என்  சின்ன பையன தான் கிளாஸ்ல ரெண்டு, மூணு பசங்க ஓவரா கலாய்க்குதுங்க போல. சார்க்கு அதனால நான் குப்ப அள்ற வேல செய்றேன்னு கோவம். அதான் பசங்க ரெண்டு பேரயும் சுகுர்ரா கவன்ச்சினு இருக்கிறேன். பெரியவன் கரெக்ட்டா இப்போ தான் எட்டாப்பு படிக்றான். 'திக் திக்' ங்குது.நம்மள மாதிரி ஆகிடுவா........ ஐயையோ! இன்னிக்கு இன்னா டா டேட்டு?"

"12. இன்னா ணா  ஆச்சு?"

"நாசமா போச்சு. பெரியவனுக்கு ஸ்கூல் டெர்ம் ஃபீஸ் கட்டணும் நாளைக்கு. இருந்த காசு எல்லாம் தங்கச்சி பையன் காது குத்துக்கே சரியா போச்சு. ஃபீஸ் மேட்டர் நெனவு இல்லாத புதுசா பக்கத்து தெரு கல்யாணி அக்கா கிட்ட  இந்த மாசம் தான் தண்டல் சீட்டு வேற சேந்து தொலைச்சேன்." 

➠ "சார்! மறுபடியும் வந்துட்டானுங்க. இந்த தடவ 7,8 பேரா வந்துருக்கானுங்க" என்று இஞ்சினீயர் ஹெல்மெட்டை கழற்றியபடி ஆபிஸுக்குள் நுழைந்தான் முரளி. 
கம்ப்யூட்டரில் அந்த வார அக்கௌண்ட்ஸைப் பார்த்துக் கொண்டிருந்த மேனேஜர் ஜோசப் நிமிர்ந்து பார்த்தான். "போச்சு டா. எத்தன தடவ சொல்றது இவனுங்களுக்கு? உள்ளூர்காரன வேலைக்கு சேத்து யார்யா மாரடிக்கறது? ஒழுங்கா வேல செய்றவன் கூட, வாரம் ஒரு நாள் பொண்டாட்டிக்கு தலைவலி, கொழந்தைக்கு பேதினு சாக்கு சொல்லி எஸ்கேப் ஆகிடுவானுங்க. பீகார், U.P ல இருந்து ஆள் கூட்டிகிட்டு வந்தோமா. நாலு ரொட்டிய போட்டு, தங்க எடமும் மாசா மாசம் வீட்டுக்கு அனுப்ப பணமும் குடுத்தோமா. ஓவர் டைம் -க்கு ஆசை காட்டி அடிச்சு வேலை வாங்குனோமா-னு  இல்லாம, இவனுங்களுக்கு நான் வேல குடுக்கணுமா? இவனுங்களுக்கு வேல வேணும்-னா பீகாருக்கோ, பெங்காலுக்கோ தான் போகணும்"

பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தான் கவுன்சிலர் சண்முகம். கூட அவன் அடிப்பொடிகளும். "சார்! வணக்கம்! எப்டி இருக்கீங்க?"

"நேத்து தான சார் பாத்தோம்?"

"ஹா ஹா ஹா. கரெக்டு தான். அப்புறம் சார். எத்தன பேர சார் அடுத்த மாசம் வேலைக்கு எடுத்துக்க போறீங்க?"

"என் கைல எதுவும் இல்ல சண்முகம். உங்களுக்கு ஏற்கெனெவே சொல்லிட்டேன். நான் வெறும் இந்த ப்ராஜெக்ட் சைட்(site)-இன்-சார்ஜ் தான். ஹெட்குவார்ட்டர்ஸ்-ல முடிவு பண்ணி ஆள் அனுப்புவாங்க. நான் வேல வாங்குவேன். அவ்ளோ தான்."

"உங்களால என்ன முடியும்-னு எனக்குத் தெரியும் சார். புரிஞ்சுக்கங்க. தமிழ்நாடு ஈ.பி-ல (E.B) இவ்ளோ பெரிய பவர்  ஸ்டேஷன் கட்ட இங்க வாழ்ந்த எத்தனை பேரோட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கு. அதுக்கு சட்டப்படி அவங்களுக்கு இழப்பீடும் வாழறதுக்கு வேலையும் நீங்க குடுக்க வேணாமா சார்?"

"ஐயோ. எத்தன தடவ சொல்றது? அது எல்லாம் ஈ.பி (E.B)  அதிகாரிங்க செய்வாங்க. கட்டி முடிச்சு, பிளாண்ட்  ஓடும் போது, ஆளுங்கள வேலைக்கு எடுப்பாங்க. எங்க கம்பெனி ஒரு பிரைவேட் கம்பெனி-னு உங்களுக்கே தெரியும். நாங்க இந்த பவர் ஸ்டேஷன் கட்றதுக்கான எலக்ட்ரிக்கல் வேல எல்லாம் கான்ட்ரக்ட் எடுத்திருக்கோம். அவ்ளோ தான். அது மட்டும் இல்லாம ஈ.பி-ல (E.B)  இழப்பீடு எல்லாம் குடுத்துட்டு தான வேலைய ஆரம்பிச்சுருக்காங்க." 

"கரெக்டு தான். எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல்-னு  மொத்தம் 16 கான்ட்ரக்ட் கம்பெனிங்க இருக்கு. 12 கம்பெனில எந்த பிரச்னையும் பண்ணாம லோக்கல் ஆளுங்கள வேலைக்கு எடுத்துக்கிட்டாங்களே. பாய்லர், டர்பைன் ல எல்லாம் இப்போ கட்டும் போதே வேல செஞ்சா தான சார் நாளைக்கு பிளாண்ட் ஓடும் போது, ஆபரேட் பண்றதுக்கும் மெய்ன்டனென்ஸ்-க்கும் விஷயம் தெரிஞ்சவங்க-னு லோக்கல் ஆளுங்களையே  எடுப்பாங்க E.B ல? பாத்து செய்ங்க."

"சாரி சார். நீங்க சொன்ன 12 கம்பெனில தான் பாக்கறேனே. 10 மணி-க்கு வந்து 2 மணிநேரம் வேல செய்ய வேண்டியது. 4 மணிநேரம் பம்ப் ரூம்ல ஒக்காந்து சீட்டாட வேண்டியது."

"சில பேர் அப்படி இருக்காங்க தான் சார். இனிமே அப்படி நடக்காம பாத்துக்கறோம். ரெண்டு மாசத்துக்கு முன்னால, நீங்க வந்த புதுசுல,ரெண்டு வருஷம் இந்த சைட்-ல (site) உங்க வேல முடியற வரைக்கும் தேவையான எல்லா உதவியும் சீப்-ஆ பண்ணிக் குடுத்ததிருக்கேன். நாங்க இல்லன்னா உங்க 45 வொர்க்கர்ங்க, 8 இஞ்சினியர்ங்க எல்லாருக்கும் வீடு, வேன், கார், சமைக்கிற ஆள் னு எல்லாம் இவ்ளோ சீப்-ஆ கிடைச்சிருக்குமா சார் ?"

"உண்மையிலேயே பெரிய விஷயம் சார். அதுக்கு ரொம்ப நன்றி. பட் இது என்னால முடியாது."

"ஓகே சார். யோசிச்சிக்கங்க. இந்த ஊர்ல எங்கள மீறி எதுவும் நடக்காது. சிட்டி-ல இருந்து ஒரு பய இங்க மீஞ்சூர் வரைக்கும் வந்து வண்டி ஓட்ட மாட்டான். உள்ளூர்லயும் எல்லா டிராவல்ஸ் கான்ட்ரேக்ட்டும் என் தம்பியை மீறி எவனும் எடுக்க மாட்டான். நாங்க இல்லனா, நீங்க சொந்தமா தான் 2 வேன், 2 சுமோ வாங்கி உங்க ஆளுங்கள சைட்-க்கு (site)  கூட்டிட்டு வரணும். டிரைவர் போட்டு சம்பளம் குடுக்கணும். உங்க ஹெட்குவார்ட்டர்ஸ்-ல உங்களுக்கு அம்பது லட்சம் சேன்க்ஷன் பண்ணத் தயாரா? உங்க பேர் தான் கம்பெனில தேவை இல்லாம கேட்டு போகும். வேற ஆள  இங்க போடுவாங்க."

"நிம்மதியா டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போய்டுவேன் சார்." 

"பார்த்து சார். இந்த சின்ன விஷயத்தக் கூட சமாளிக்கத் தெரியல-னு சொல்லி உங்கள வேலைய விட்டே  தூக்கிடப் போறாங்க. மினிஸ்டர் வேலு-வும் லோக்கல் ஆளுங்களுக்கு சப்போர்ட்டு. உங்களுக்கு வீடு, சாப்பாடு எல்லாமே பிரச்னை ஆகும். இல்லாட்டி தேவை இல்லாம மினிஸ்டரே டைரக்டா இன்வால்வ் ஆக வேண்டி வரும். நிறைய ‘செலவு’ ஆகும். லோக்கல் ஆளுங்கள  எடுக்காததால, சிவில் வொர்க் குப்தா கம்பெனி மாசா மாசம் எவ்ளோ செலவு பண்றாங்க-னு தெரியும் இல்ல? இதுக்கு எல்லாம் பதிலா பேசாம 10 பேர் -க்கு வேல போட்டு குடுங்க சார். பாத்து செய்ங்க. நாங்க வர்றோம்." கும்பிட்டுக் கிளம்பினான் சண்முகம். 
கொஞ்சம் வெலவெலத்து தான் போனான் ஜோசப். ஆழ்ந்த யோசனைக்குப் பின் மொபைலை எடுத்து ஜெனரல் மேனேஜர் நம்பரை டயல் செய்தான். 

➠வகுப்பு 5. பிரிவு 'ஆ'.  உணவு இடைவேளை.
"எவன் டா என் ஸ்கேல எடுத்தது?" - பாலா 

"டேய் இன்டெர்வெல் டைம்-ல ஹோம்வொர்க் முடிக்க நான் தான் எடுத்தேன். கை தவறி ஒடஞ்சிடுச்சு" - அமீர் 

"மரியாதையா நாளைக்கு புது ஸ்கேல் வாங்கிக் குடுத்துடு. சாரி கூட சொல்ல மாட்டியா?" - பாலா 

"சாரி...ஈஈ!!”
ஏதோ யோசித்தவனாய், “சாரி... பூரி... குப்பத் தொட்டி லாரி" என்று அமீர் ஆரம்பிக்க, இருவரும் சுதீப்பைப் பார்த்துக் கோரஸாகக் 'குப்பத் தொட்டி லாரி' என்று கத்தி கிண்டல் செய்தனர்.

சுதீப், குமாரின் இளைய குமாரன்!

கோபம் தலைக்கேறி அவர்களை அடிக்கப் போனவனை ஜெனிபரும், எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பிரதீப்பும் தடுத்து நிறுத்தினர். ஜெனிபர், சுதீப்பின் தோழி! பிரதீப், குமாரின் மூத்த குமாரன்!  

➠ஸ்கூல் டெர்ம் ஃபீஸ் 2000 ரூபாய். ஏற்கெனவே  வாங்கிய கடன்களுக்கே மாதா மாதம் வட்டி கட்டி மாளவில்லை. குமார், தனக்குத் தெரிந்த எல்லோரிடமும் முயற்சி செய்து பார்த்து விட்டான். ஒன்றும் நடந்த பாடில்லை. யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கையில், மொபைல் ஒலித்தது. 

"குமார்"

"சொல்லுங்க ணா. எப்டி கிறீங்க?"

"நல்லா இருக்கேன் டா நல்லவனே. வேலைய விட்டு போனதுல இருந்து ஆள் அட்ரஸே காணோம்?"

"அப்டிலாம் இல்லணா. இங்க தான் ணா முனிசிபாலிட்டி-ல கேஷுவல் லேபர்-ஆ (casual labour)  குப்ப வண்டி ஓட்டினு இருக்கிறேன்"

"தெரியும் டா. ஏதோ நல்லா இருந்தா சரி. சரி ஒரு அரை நாள் வேல இருக்கு. பண்றியா? இன்னைக்கு டூட்டி டைம் முடிஞ்சுது இல்ல?"

நமீபியா பந்துவீச்சை எதிர்கொள்ளத் தயாராகும் ரோஹித் ஷர்மாவைப் போல மனதுக்குள் குதூகலமானான்.                                 இருந்தும் மகிழ்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளாமல்,

"என்ன வேல ணா?"

"நம்ம 'விக்டரி ஸ்டார்' விக்னேஷ் இல்ல?"

"யாரு?"

"அதான் டா உன் கூட படிச்ச பய. விஜய் டிவி 'கனா காணும் காலங்கள்', 'சென்னை 28' படத்துல லாம் மூணு, மூணு செகண்டு வந்ததுக்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு ட்ரீட் வெச்சானே."

"ஆமா ணா. ஆமா ணா."

"இப்போ ஏதோ ஒரு ஷார்ட் ஃபிலிம் டைரக்டர பிரண்டு பிடிச்சு, ஒரு படத்துல வில்லனுக்கு முதல் அடியாளா சான்ஸ் வாங்கிட்டானாம்."

"சூப்பர்"

"ஹீரோ அர்ஜுன். படத்துல பொறி பறக்குற மாதிரி ஒரு ஃபைட் சீனாம். அர்ஜுன் வில்லனப் பாத்து பிஸியா முறைச்சுனு இருக்கும் போது, சம்பந்தமே இல்லாம கத்திகினே ஓடி வந்து, 'பொக்'குனு வாய்லயே குத்து வாங்குறான் நம்ம ஆளு. அப்போ அர்ஜுன்-க்கு ஒரு ஸ்லோ மோஷன் ஷாட். பேக்கிரவுண்டில் நெஜமாவே   தீப்பொறி பறக்கணுமாம்."                                                                    

"ணா. சத்தியமா  டைரக்டர் கூட சீன இப்டி சொல்ல மாட்டார்ணா. பின்ற ணா."

"ஹி ஹி... தேங்க்ஸ் பா. மேட்டர் என்ன னா, சூட்டிங் இங்க பக்கத்தில எண்ணுர்ல. அந்த பொறியை பறக்க வைக்கிறதுக்கு தம்பி நம்ம பேர டைரக்டர் கிட்ட சொல்லி இருக்கு. இன்னைக்குனு பாத்து, வொர்க்ஷாப் புல் டைட். என்னால  நகர முடியாது. வொர்க்ஷாப் பசங்களுக்கும் வேற வேல குடுத்திருக்கேன். நீ ஃப்ரீயா இருந்தா, நம்ம கேஸ்சிலிண்டர், கேஸ் கட்டிங் செட் எல்லாம் எடுத்துனு போய், அவங்க கேக்கற மாதிரி சீன முடிச்சுக் குடுத்துட்டு வந்துடு. 5 மணிநேரத்துக்கு 5000 பேசி  இருக்கேன். நீ 1500 எடுத்துக்க"

"ஐயய்யோ. ணா.. பையன் ஸ்கூல் மேட்டரா ஒரு முக்கியமான வேல இருக்குது ணா"

"டேய் டேய் டகால்டி.. உன்ன பத்தி நல்லாத் தெரியும்டா  எனக்கு. காசு எக்ஸ்ட்ரா வேணும்னா கேளுடா. 1700 எடுத்துக்க. சரியா?"

"என்ன ணா இப்டி சொல்ட ? நான் செய்றேன் ணா."     

➠'காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது' முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் குமார்.                                                   

"அணு உலையில் உருவாகும் கதிரியக்கக் கழிவுகளை அழிக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தக் கழிவுகளை சிறப்புக் கொள்கலன்களில் வைத்து, கடலுக்கடியில் எறியும் வழக்கம் இருந்தது. 1993-ஆம் ஆண்டு முதல் இது தடை............" - பிரதீப்

"ஏன்டா உள்ளாற வர சொல்லோவே நீ வேற குப்ப. கழிவுங்கிற? வேற பாடம் படிடா."

"கம்முனு  இருப்பா. நாளைக்கு டெஸ்ட் இருக்கு"

"சரிடா  பா சயின்டிஸ்ட்டு. சரி இப்டி அண்டா அண்டாவா கடலுக்கடியில போட்டு கடலே ரொம்பிட்டா, அப்றம் இன்னா டா பண்ணுவீங்க?"

"அதான் செவ்வாய் கிரகம் வரைக்கும் ராக்கெட் விட்டாங்க இல்ல. நிலாவுக்கு, செவ்வாய் கிரகத்துக்கு எல்லாம் பாயிண்ட்-டு-பாயிண்ட் 'குப்ப வண்டி ராக்கெட் சர்வீஸ்' ஆரம்பிச்சுடலாம். கம்முனு  இருப்பா" 

"ஹா ஹா. சரிதான் போ.  சின்னவன் இன்னாடா ஓவர் அமைதியா இருக்கிறான் இன்னைக்கு. டேய் சின்னவனே!"

"இன்னைக்கும் சண்டை." - பிரதீப் 
முறைத்துப் பார்த்தான் சுதீப்.

பெருமூச்சு விட்டபடி, மல்லாந்து படுத்துக் கண்களை மூடினான் குமார். 'இன்னா வாழ்க்கைடா இது. ஒரு கவலை ஓஞ்சா அடுத்தது. எத்தினியோ வேல மாறி, ஏதோ இப்போ தான் இந்த வண்டி ஓட்டி நெலையா மாசம் பொறந்தா  5500 ரூபாய் கெடைக்குது’ படுத்தவன் அப்படியே கண்ணசந்து விட்டான்.

"டேனியல் வந்துகிறான் பாருங்க" மனைவி லதா தட்டி  எழுப்பினாள்.

"என்ன ணா? ஏழு மணிக்கெல்லாம் படுத்துட்ட? சரி சரி ஒடனே உன் 10th, ITI  சர்டிபிகேட் லாம் எட்த்து குடு. நம்ம சண்முகம் அண்ணன் காலைல செம போடு போட்டு வந்துருக்காப்ல. அடுத்த மாசத்துல இருந்து உனுக்கு, எனுக்கு, இன்னும் ஒரு 7,8 பேருக்கு இந்த E.B பவர் ஸ்டேஷன் இல்ல. அங்க கான்ட்ராக்ட் வேல செய்ற ஏ.டி.பி.எல் கம்பெனி-ல எலெக்ட்ரிஷியன் வேல. 7500 ரூபாய் சம்பளம். மாசாமாசம் 1000 ரூபாய் சண்முகம் அண்ணனுக்கு குடுத்துணும். நல்லா வேல செஞ்சு, E.B ஆபிஸருங்கள தெரிஞ்சு வெச்சுகிணு, கொஞ்சம் அமெளண்ட் தள்ளுனா, ரெண்டு வருஷத்துக்கு அப்றம் E.B-லயே பெர்மனண்ட் ஆய்ட்லாமாம்" -  பேசிக் கொண்டே போனான் டேனியல்.

"டேய் இன்னா டா சொல்ற? நெஜமா தான் சொல்றியா?" - ஆச்சரியம் தாளாமல் 'கற்றது தமிழ்' அஞ்சலி போல் கேட்டான் குமார்.

"அட ஆமா ணா. நீ மொதல்ல சர்டிபிகேட்-லாம் குடு"               

எடுத்துக் கொடுத்து விட்டு, சின்னவனைப் பார்த்துச் சிரித்தான். விட்டத்தைப் பார்த்து, 'முட்ச்சு முட்ச்சா போட்டு உட்டு, இப்டி நீயே அசால்ட்டா அவுத்தும் உட்றியே தலைவா' என்று எண்ணியபடி ஒரு கும்பிடு போட்டான்.

ஓடி வந்து அவன் முதுகில் உப்பு மூட்டை ஏறிக்  கொண்ட சின்னவன், "சூப்பர் பா!" என்றான். "நான் போய் என் பிரண்டு ஜெனிபர்-ட சொல்லிட்டு, அவ ஹோம்வொர்க் நோட்ட வாங்கிட்டு வந்துர்றேன்" என்று சொல்லிவிட்டு நிலைக்கண்ணாடி முன் போய் நின்றான்.

தலையை சீவிவிட்டு கலைத்து விட்டவன், சட்டை முன்பக்கப்  பாதியை  இன் பண்ணி, பின்பக்கப்பாதியை  வெளியே விட்டுக் கிளம்பி ஓடினான் ஐந்தாம் வகுப்பு 'ஆ' பிரிவு சுதீப்.                                                                   

திடுக்கிட்ட குமார், 'இந்த காலத்து பசங்க ஏன்டா இவ்ளோ வேகமா வளர்ந்துத் தொலையறானுங்க', என்று நினைத்தபடி மறுபடியும் விட்டத்தைப் பார்த்தான். கொஞ்சம் கோபமாக!!