Powered By Blogger

Thursday, October 22, 2015

கல்லூரி விடுதி கேரக்டர்கள்!!

கல்லூரி விடுதி கேரக்டர்கள்!!

'என் நட்பு! என் உரிமை!' என
'கடலை ஒழிப்பு'ப் புரட்சிப் போராட்டம் நடத்தும் ஒருவன்
'என் பணம்! என் அண்ட்ராயர்!' என
இடுப்பில் நிற்காத கால்சட்டையோடு திரியும் ஒருவன்
அசதியின்றி நள்ளிரவிலும் ஒரு வாளி துணிதுவைத்து
சோப்பு நுரையோடு காலம் தள்ளும் ஒருவன்
பெசன்ட் நகரில் பஜ்ஜி மென்றுகொண்டே
கடல் நுரையில் கவிதை தேடும் ஒருவன்
கணக்கு நன்றாக வருமென்று CAT கிளாஸ்  போகும் ஒருவன்
கணக்கு பண்ணப் பின்தொடர்ந்து G.R.E கிளாஸ் போகும் ஒருவன்!!

வகுப்புக்குப் போகாமல் விடியவிடிய படம் பார்த்தாலும்
பரீட்சையில் படங்காட்டி முதல் மதிப்பெண் எடுக்கும் ஒருவன்
பகுத்துத் தொகுத்து வகைவகையாய் வகுப்புக்குறிப்புகள் எடுத்தாலும்
பல்லிளிக்கும் வினாத்தாளைப் பார்த்ததும் கோட்டைவிடும் ஒருவன்
பிங்க் ஃபிலாய்ட்-டையும் பியர்-ஐயும் சிலாகிக்கும் ஒருவன்
தேனிசைத் தென்றலிலும் தேநீரிலும் சுகங்காணும் ஒருவன்
நான்காம் ஆண்டின் இறுதித் தேர்வில் கூட
நான்கு வண்ண பேனாக்களோடு விடை எழுதும் ஒருவன்
இன்ஜினியரிங் டிராயிங்கைக் கூட, குரூப் செல்ஃபி-இல்
முன்னால் நிற்பவன் முகம்போல் அஷ்டகோணலாய் வரையும் ஒருவன்!!

ஆங்கில சீரியல் பார்த்து அறையில் தனியாய் சிரிக்கும் ஒருவன்
அங்குல அங்குலமாய் நடிகை படத்தைப் பார்த்து ரசிக்கும் ஒருவன்
கவலையின்றி ஓரம் அமர்ந்து LAN GAMING 'மிக்சர்' தின்னும் ஒரு கும்பல்  
கல்லூரி தேர்தலே வாழ்க்கையென்று கவலையோடு திரியும் ஒரு கும்பல்
நிஷா, உஷா, எந்த ஸ்திரீ பின்னாலும் சுற்றும் ஒருவன்
ஈஷா யோகா, ஸ்ரீஸ்ரீஸ்ரீ என சுயதேடலில் பற்றுள்ள ஒருவன்
'மிளகாய் பஜ்ஜியா? வாழைக்காய் பஜ்ஜியா?' முடிவெடுக்க முன்னூறு ஆராய்ச்சி செய்யும் ஒருவன்
மெஸ் உணவைக் கூட மூன்று முறை கேட்டு வாங்கி உண்ணும் ஒருவன்
தொலைக்காட்சி அறையிலேயே குடித்தனம் நடத்தும் ஒருவன்
குளியல் அறையை வாரமொரு மட்டுமே பார்க்கும் ஒருவன்!!

அடையாள அட்டையை பிடுங்கிச் சென்று
அம்பது ரூபாய் அபராதம் விதிக்கும் 'டீன்'
அயராது இம்சிக்கும் 'தனி ஒருவன்'!!

Saturday, October 10, 2015

பெங்களூர் நாட்கள்!! (Bangalore Days!!)

பெங்களூர் நாட்கள்!! (Bangalore Days!!)

மடிப்பு கலையாத சட்டை
மார்போடு அடையாள  அட்டை
வீதியில் கால்வைத்தால் ஏறி மிதிக்கும் வாகன  நெரிசல்
வீட்டுக்கு வந்து கண்ணாடி பார்த்தால் முகமெல்லாம் கரிசல்
யாரென்று தெரியாத எதிர் வீட்டு மாந்தர்
'பார்'என்று  உரக்கச் சொல்லும் தாராளமய மாதர் ;)
வாரநாட்களில் மேலாளரிடம் முதல்தர வேசம்
வார இறுதியில் காடு, மலைகளில்  பிரவேசம்
அடுப்பங்கரையில் சாராயம் காய்ச்சும் ப்ரூ 'பப்'கள்
துடுப்பில்லாப்  படகாய் சுற்றும் வயதினரின் 'பில்ட்-அப்'கள்
கோடையிலும் விடாது குளிர்விக்கும் வருண பகவான்
சோடை போகாத வானிலையில் மலைகளுக்கு சகவான்
பலவித மணம்கொண்ட மலர்களின் மாலை
பல ஊர் மக்களின் கலகலப்பான சோலை!!