Powered By Blogger

Tuesday, August 31, 2010

சிறுகதையில் கன்னி முயற்சி - ராபின்ஹூட்

ராபின்ஹூட்
(25.03.2008)


"சிவா!... கிளம்பலாமா?" பைக்கின் ஆக்சலரேட்டரை முறுக்கியபடி கத்தினான் அரவிந்த். கடிகார முள் ஐந்தைத் தொட்டவுடன், அலுவலகத்தில் இருந்து கிளம்பி விடுவது அரவிந்தின் வழக்கம்.'தோழன் எவ்வழியோ, தானும் அவ்வழியே' என்று சிவாவும் கிளம்பி விடுவான். பின்னே?! அவன் பில்லியனில் அமர்ந்தல்லவா இவன் செல்ல வெண்டும்...

"போற வழியில மாணிக்கம் அண்ணாச்சி கடையில ரெண்டு வெண்கலப் பானை வாங்கணும். வாங்கிட்டு போயிடலாமா?" சிவாவிடம் கேட்டான் அரவிந்த். "நல்லதா போச்சு! பக்கத்தில இருக்கிற கடையில எனக்கும் வேலை இருக்கு," என்றான் அரவிந்த்.


அதென்னவோ தெரியவில்லை, வெண்கலப் பானையில் சமைப்பதால்தான், தான் இந்த அறுபது வயதிலும் திடகாத்திரமாய் இருப்பதாக அரவிந்தின் அம்மாவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் தான், புதிதாய் சொந்த வீட்டுக்குச் சென்றிருக்கும் தன் மருமகளிடம் தன் பழக்கத்தைத் தொடரும்படி கூறியிருந்தாள். அதுவும், தான் ராசியான கடை என நம்பும் மாணிக்கம் அண்ணாச்சி கடையில் தான் வாங்க வேண்டுமென்று மகனுக்கு கட்டளை வேறு!


சென்னையிலுள்ள பிரதான சாலைகளினூடே ஊர்ந்து, ஒரு வழியாக நங்கநல்லூரின் சிறிய சாலைகளில் சீற ஆரம்பித்தது அரவிந்தின் பைக். அண்ணாச்சி கடை வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான், அரவிந்த். சிவா பக்கத்து கடையினுள் சென்றான்.


'மாணிக்கம் ஸ்டோர்ஸ்'!! அந்த வட்டாரத்திலேயே வசதியான மாணிக்கம் செட்டியாரின் கடை. வேண்டியதை வாங்கிக் கொண்டு, அரவிந்த் பில் கவுண்டருக்கு வரவும், சிவா அவனைத் தேடிக் கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"என்ன அண்ணாச்சி, எப்படி இருக்கீங்க?" நன்கு பரிச்சயமானவர் என்பதால் தோழமையோடு விசாரித்தான் அரவிந்த். "எனக்கென்ன தம்பி, ஆண்டவன் புண்ணியத்தில நல்லா இருக்கேன். அம்மா எப்படி இருக்காங்க? வைஃப் வரலீங்களா?" கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் அண்ணாச்சி. இதர விசாரிப்புகளுக்குப் பின், "எழுநூறு ரூபாய் ஆகுதுங்க தம்பி," என்றார்.
"பார்த்து சொல்லுங்க. எப்பவும் நம்ம கடையில வாங்கறது தானே அண்ணாச்சி," நைச்சியமாக பேரம் பேச ஆரம்பித்தான் அரவிந்த்.

'சே! மனித மனம் எவ்வளவு இருந்தாலும் திருப்தி அடையாதா? கை நிறைய சம்பளம் வாங்கினாலும் கூட, பேரம் பேசாமல் எந்த பொருளையும் வாங்க மாட்டார்களா?' சிவாவின் கண்ணோட்டம் வேறு மாதிரி இருந்தது. பல்வேறு கேள்விக் கணைகள் சிவாவின் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தன.
ஒருவாறாக, பேரம் படிந்து 630 ரூபாய் கொடுத்துவிட்டு, பெருமிதத்தோடு பைக்கில் அமர்ந்தான் அரவிந்த். சிவாவும் ஏறிிக் கொண்டான். சிவாவை வீட்டில் இறக்கிவிட்டு விட்டு, தன் வீட்டுக்கு விரைந்தான் அரவிந்த்.

மறுநாள். ஞாயிற்றுக்கிழமை! அலுவலக விஷயமாக ஏதோ ஒரு ஃபைலை வாங்கிச் செல்ல அரவிந்தின் வீட்டுக்கு வந்தான் சிவா. அரவிந்த், சோஃபாவில் சாய்ந்தபடி ஒவ்வொரு சேனலிலும் சலிக்காமல் டாப் 10 மூவீஸை பார்த்துக் கொண்டிருந்தான். வந்தவனுக்கு காபி தர மனைவியிடம் சொல்லிவிட்டு, ஃபைலைத் தேடிக் கொண்டிருந்தான்.


அப்போது, வாசலில் "கீரை வாங்கலியாம்மா?" என்று கீரைக்காரியின் குரல் உரக்கக் கேட்டது. ஃபைலை சிவாவின் கையில் கொடுத்துவிட்டு அரவிந்த் வெளியே வந்தான். "என்னம்மா, ரெண்டு மூணு நாளா ஆளைக் காணோம்," என்று உரிமையோடு விசாரித்தான். "பொண்ணுக்கு உடம்பு சரியில்லீங்க. ஆஸ்பத்திரிக்கு அலையவே நேரம் சரியாப் போச்சு," பெருமூச்சோடு சொன்னாள் அவள்.


"பொண்ணை உடம்பைப் பார்த்துக்கச் சொல்லும்மா. பத்தாவது படிக்கிறா இல்ல. நல்லா படிக்கச் சொல்லு," என்று அறிவுறுத்திவிட்டு, "சரி சரி, ரெண்டு கட்டு பொன்னாங்கன்னி கீரை கொடும்மா," என்றான்.


"கட்டு மூணு ரூபாய் சார்,'' என்றாள் கீரைக்காரி. உள்ளே வந்த அரவிந்த், சில்லரைகளைத் தேடி எடுத்து எட்டு ரூபாயை அவளிடம் நீட்டினான். 'நன்றி' என்பது போல் தீர்க்கமாக அவனைப் பார்த்துவிட்டு, "நல்லா இருங்கய்யா, வரேன்," என்று கிளம்பினாள்.


நடந்தவற்றை பார்த்துக் கொண்டே இருந்த சிவா,"அரவிந்த், பக்கத்துல நம்பிராஜன் சார் வீட்டு வரைக்கும் போகணும். நம்ம ரெண்டு பேரையும் வரச் சொன்னார். போலாமா?" என்றான். "ஓ! போகலாமே! நான் கூட கிளம்பலாம்னு தான் இருந்தேன்," பதிலளித்தான் அரவிந்த். உடைகளை மாற்றிக் கொண்டு,"காயத்ரி! வீட்டைப் பார்த்துக்கோம்மா," என்று மனைவியிடம் கூறிவிட்டு சிவாவுடன் புறப்பட்டான்.


"உங்க அப்பா செம்பாக்கத்துல இருக்கார் இல்ல. அங்க எல்லாம் 'லேண்ட் வேல்யூ' எப்படி இருக்கு?" வழக்கமாக இரண்டு, மூன்று குடும்பத் தலைவர்கள் சந்தித்தால் எந்த மாவை அரைப்பார்களோ, அதே மாவை அரைத்துக் கொண்டு இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.


திடீரென்று கல் இடறிக் கீழே விழப் போன அரவிந்தைத் தாங்கிப் பிடித்தான் சிவா. நல்ல வேளை, காயம் எதுவும் இல்லை. அரவிந்தின் செருப்பு மட்டும் பிய்ந்து அவனைப் பார்த்துப் பல்லிளித்தது. சற்றும் முற்றும் பார்த்ததில், சட்டையில் இருக்க வேண்டிய சுருக்கங்களை கன்னத்திலும் வயிற்றிலும் கொண்டு ஒரு பெரியவர் செருப்பு தைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். 'அது சரி, சட்டையில் எப்படி சுருக்கங்கள் இருக்கும்? அதில் ஒட்டுகள் மட்டுமல்லவா கண்ணுக்குத் தெரிந்தன!'


பிய்ந்த செருப்போடு, ஒருவாறாக சப்பாணி போல் நடந்து அவரிடம் வந்து சேர்ந்தான், அரவிந்த். செருப்பைத் தைக்கக் கொடுத்துவிட்டு சிவாவும் அரவிந்தும் பேசிக் கொண்டிருந்தனர். தைத்து முடித்ததும்,"ஐந்து ரூபாய்" என்று பேசக் கூட முடியாமல் விரலாலேயே சைகை காண்பித்தார் அந்த பெரியவர். பாவம்! இவன் தரப்போகும் பணத்தில் தான் அவர் காலை உணவையே சாப்பிட வெண்டுமோ என்னவோ?!


நன்றாக தைக்கப்பட்டிருக்கிறதா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டு காலில் அணிந்து கொண்டு, ஒரு பத்து ரூபாய்த் தாளை அவரிடம் நீட்டி,"வச்சிக்கங்க," என்றான் பாசத்தோடு. மிக உற்சாகமாக அவனுக்கொரு 'சலாம்' வைத்துவிட்டு அருகிலிருந்த டீக்கடைக்கு விரைந்தார் அந்தப் பெரியவர்.


தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சிவாவிடம், "ஏன் சிவா, தங்களையே நம்பாம பிச்சை எடுக்கிறவங்களுக்கு காசு தர்றதுக்கு பதிலா, இந்த மாதிரி ஆளுங்களுக்கு காசு கொடுக்கிறது உத்தமம், இல்ல?" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

அண்ணாச்சியிடம் மிச்சம் பிடித்த 70 ரூபாயில் மீதி 63 ரூபாய் என்னவாகும் என யோசித்தபடி, அரவிந்தை ஒருவித பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டே நடந்த சிவா மனதுக்குள் நினைத்தான்:

"இருப்பவர்களிடம் பிடுங்கி
இல்லாதவர்களிடம் பகிர்ந்தளிக்கும்
இவனும் ராபின்ஹூட் தானே!!!


சிறுசேமிப்பு

சிறுசேமிப்பு
(2004)



வாட்டும் கோடையில் தகிக்கும் பாலையில்
காட்டுச் செடிகள் துளிர்க்கா மணலில்
குன்றினை முதுகில் ஏந்தி நடக்கும் - சேமிப்புக்கு
சான்றாய் வாழ்ந்து கிடக்கும் ஒட்டகமென்னும் உயரிய
விலங்கு, தன் உடலில் நீரை சேமிக்காவிடின்
நலவாழ்வு வாழ்வதும் இயலுமோ!

மானிடராய்ப் பிறந்த போதிலும் பற்றற்ற
ஞானியராய் வாழ்ந்து இறைவாழ்வே குறிக்கோளாய்
மறைசொல்லே மந்திரமாய் கொண்டோர் போல்
இனிய மலர்களில் அமைந்த மதுரமே குறிக்கோள்
என வாழும் தேனீக்கள் தேனை சேமிக்காவிடின்
அமிர்தம் ஒத்த தேனை சுவைக்க
அமரராகிய தேவர்க்கும் கூடுமோ!

இனிப்பை கண்டதும் தனித்து செல்லாது
அணி திரண்டு உணவைக் கொணரும்
'சீனி'வாசனாகிய எறும்பு தான் சேர்த்த
உணவை சேமிக்கா திருந்தால்
வேனில் முடிவில் வாழவும் முடியுமோ!

தன்வாழ்வும் வளமும் பெருகவும் - தான்பெற்ற
நன்மக்கள் வாழ்வு சிறக்கவும் - அனுதினமும்
அயராது உழைத்து ஈன்ற பொருளையும்
கயல்விழி கொண்ட மடவார் அலைந்து
திரிந்து கொணரும் நீரையும்; காற்றைக்கெடுக்கும்
கரிவாயுவை வெளிவிடினும் இன்வாழ்விற்கு உதவும்
எரிபொருளையும் சேமிக்காது வாழ்ந்தால்
சலசலப்பின்றி வாழும் பேறு
உலக மாந்தர் தமக்கு கிட்டுமோ?!

சேர்க்கும் செல்வம் சிறிதே எனினும்
சேமிக்கும் பழக்கம் நம்மில் வந்தால்
சோர்ந்து வாழும் அல்லல் இல்லை!

முகத்திற்கு ஒளியூட்டுவது சிரிப்பு!
அகத்திற்கு ஒளியூட்டுவது களிப்பு!
இருளுக்கு ஒளியூட்டுவது நெருப்பு! - தீபாவளி
இரவுக்கு ஒளியூட்டுவது மத்தாப்பூ!
உயிருக்கு ஒளியூட்டுவது இதயத்துடிப்பு!
உயர்வாழ்வுக்கு ஒளியூட்டுவது
சேமிப்பு!சேமிப்பு!சிறுசேமிப்பு!


பிரிவு (பேர்வெல்)

பிரிவோம் சந்திப்போம்!!!
(2008)

அணுவைப் பிளந்தால் தான் அடங்காத ஆற்றல்
முகில்கள் உடைந்தால் தான் முடங்காத வெள்ளம்
கண் இமைகள் பிரிந்தால் தான் உலகம் தெரியும்
அன்பானவர்கள் பிரிந்தால் தான் அன்பும் புரியும்!

பிரிவோம் சந்திப்போம்!!!

அன்னை பாரதம்

ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!
(09.09.2007)

விண்ணும் மண்ணும் இணைவதில்லை
கண்ணும் இமையும் பிரிவதில்லை
பண்ணும் இசையும் கசப்பதில்லை
இது
இயற்கையின் நியதி!
தேசங்கள் பாரில் பலவிருந்தாலும்
பாசத்தில் நிலைபெற்று உயர்ந்தது பாரதம்
இது
நம் நாட்டு மக்களின் மதி!
ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!

சாதிகளும் மதங்களும் பலவிருந்தாலும்
நீதியும் தர்மமும் நிலைபெற்ற நாடு!
அறத்தையும் ஞானத்தையும் உலகுக்கு போதித்த
புத்தபிரானும் காந்திமகானும் பிறந்த பொன்னாடு!
பாரதத்தாயின் தவப்புதல்வர்க்கள் யாவரும்
ஒன்றாய் வாழும் வீடு!
பலநாட்டுப் பறவைகளும் சேர்ந்தாலும்
சலசலப்பின்றி வாழும் கூடு!
ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!

வீரம், ஈரம், ஞானம் மூன்றும்
இந்தியர்களின் உயிர்ப்பாய்த் தோன்றும்!
உலகுக்கு அஹிம்சையை மீண்டும்
நாமே உணர்த்திடல் வேண்டும்!
வற்றாத நதிகளும், எட்டாத சிகரங்களும்,
குன்றாத மழையும், அருவிப் பொழிவும்,
மடந்தையர் விரும்பும் பொன்னும்
மண்ணில் விளையும் மணியும்
மானுடம் பேணும் மேன்மைத்
தொழிலாம் உழவும், பிறவும்
பாரத அன்னையின் குன்றா அணிகளாம்!
ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!

தென்முனைக் குமரியில் அலைகள் கொந்தளிக்க
தன்மனந் கசிந்து யாவரும் உதவ
கூர்ச்சரத்தில் (குஜராத்) பூகம்பம் வந்தால்
பார்க்குமிடமெல்லாம் உதவிக் கரங்கள்!!
பலவித மணம்கொண்ட மலர்களின் மாலை
ஒரே மனம்கொண்ட மக்களின் சோலை
முன்னேற்றப் பாதையில் இந்தியாவின் காலை
அடிவைக்க உழைப்பதே நம்முடைய வேலை!
ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!

ஏற்றம் என்பது உள்ளதெனில்
மறுபுறம் தாழ்வும் இருந்திடுமே!
ஏமாற்றம் மட்டுமே சந்தித்து
ஏழ்மையில் உழலும் மானிடரும்
பாரதத்தில் உள்ளனரே!
அம்மக்களின் வாழ்வும் உயர்ந்திட
பாரத அன்னையின் தவப்புதல்வனே!
இந்தியாவை முன்னேற்ற வீறுகொண்டு எழு!
தாய்நாட்டை நாளும் பற்றுகொண்டு தொழு!

பழமை மாறா புதுமைப்பெண்

பழமை மாறாப் புதுமைப் பெண்!
(2006)

அன்று பாரதி கண்ட கனவு
இன்றைய பெண்களின் வாழ்வு!
திடமான மன உறுதியைப் பெற்றபோதிலும்
தடம்மாறாது அதைப் பின்பற்றுபவர்!
ஆண்மக்கள் நிகராய் உரிமை பெற்றும்
தொன்மக்கள் வாய்ச்சொற்கள் மறவாதவர்!

இன்பம் துன்பம் இரண்டிலுமே
இறைவனைக் காணும் ஞானியர்போல்
இல்வாழ்கையில் நேரும் துயரங்களை
இன்முகத்தோடு ஏற்கும் நல்மனத்தவர்!
அத்துயரம் எல்லை மீறும்போது
சத்தியம் தவறாது எதிர்ப்பவர்!

மேற்கத்திய நாகரிகமென்னும் நஞ்சு தன்னை
நசுக்க முனைந்த போதிலும்
மாசுநீக்கும் எண்ணதோடு அக்கொடிய
அசுரனை திடமனத்தோடு அழிப்பவர்!

ஆலையிலும் கல்விச்சாலையிலும் பணிபுரிந்தாலும்
சேலையையெத் தன் உடையெனக் கொண்டவர்!
மிளிரும் பொன்னகையோடும்
ஒளிரும் புன்னகையோடும் காட்சிதருபவர்!

கண் இமைக்கவும் பொழுது இல்லாது
பணி செய்யும் பெண் ஆயினும்
தன் பிள்ளைக்குத் தானே சோறூட்டும்
கனிவான மனங்கொண்டவர்!

அவரே
பாரதி கண்ட புதுமைப் பெண்!
பழமை மாறா புதுமைப் பெண்!