Powered By Blogger

Tuesday, August 31, 2010

சிறுகதையில் கன்னி முயற்சி - ராபின்ஹூட்

ராபின்ஹூட்
(25.03.2008)


"சிவா!... கிளம்பலாமா?" பைக்கின் ஆக்சலரேட்டரை முறுக்கியபடி கத்தினான் அரவிந்த். கடிகார முள் ஐந்தைத் தொட்டவுடன், அலுவலகத்தில் இருந்து கிளம்பி விடுவது அரவிந்தின் வழக்கம்.'தோழன் எவ்வழியோ, தானும் அவ்வழியே' என்று சிவாவும் கிளம்பி விடுவான். பின்னே?! அவன் பில்லியனில் அமர்ந்தல்லவா இவன் செல்ல வெண்டும்...

"போற வழியில மாணிக்கம் அண்ணாச்சி கடையில ரெண்டு வெண்கலப் பானை வாங்கணும். வாங்கிட்டு போயிடலாமா?" சிவாவிடம் கேட்டான் அரவிந்த். "நல்லதா போச்சு! பக்கத்தில இருக்கிற கடையில எனக்கும் வேலை இருக்கு," என்றான் அரவிந்த்.


அதென்னவோ தெரியவில்லை, வெண்கலப் பானையில் சமைப்பதால்தான், தான் இந்த அறுபது வயதிலும் திடகாத்திரமாய் இருப்பதாக அரவிந்தின் அம்மாவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் தான், புதிதாய் சொந்த வீட்டுக்குச் சென்றிருக்கும் தன் மருமகளிடம் தன் பழக்கத்தைத் தொடரும்படி கூறியிருந்தாள். அதுவும், தான் ராசியான கடை என நம்பும் மாணிக்கம் அண்ணாச்சி கடையில் தான் வாங்க வேண்டுமென்று மகனுக்கு கட்டளை வேறு!


சென்னையிலுள்ள பிரதான சாலைகளினூடே ஊர்ந்து, ஒரு வழியாக நங்கநல்லூரின் சிறிய சாலைகளில் சீற ஆரம்பித்தது அரவிந்தின் பைக். அண்ணாச்சி கடை வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான், அரவிந்த். சிவா பக்கத்து கடையினுள் சென்றான்.


'மாணிக்கம் ஸ்டோர்ஸ்'!! அந்த வட்டாரத்திலேயே வசதியான மாணிக்கம் செட்டியாரின் கடை. வேண்டியதை வாங்கிக் கொண்டு, அரவிந்த் பில் கவுண்டருக்கு வரவும், சிவா அவனைத் தேடிக் கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"என்ன அண்ணாச்சி, எப்படி இருக்கீங்க?" நன்கு பரிச்சயமானவர் என்பதால் தோழமையோடு விசாரித்தான் அரவிந்த். "எனக்கென்ன தம்பி, ஆண்டவன் புண்ணியத்தில நல்லா இருக்கேன். அம்மா எப்படி இருக்காங்க? வைஃப் வரலீங்களா?" கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் அண்ணாச்சி. இதர விசாரிப்புகளுக்குப் பின், "எழுநூறு ரூபாய் ஆகுதுங்க தம்பி," என்றார்.
"பார்த்து சொல்லுங்க. எப்பவும் நம்ம கடையில வாங்கறது தானே அண்ணாச்சி," நைச்சியமாக பேரம் பேச ஆரம்பித்தான் அரவிந்த்.

'சே! மனித மனம் எவ்வளவு இருந்தாலும் திருப்தி அடையாதா? கை நிறைய சம்பளம் வாங்கினாலும் கூட, பேரம் பேசாமல் எந்த பொருளையும் வாங்க மாட்டார்களா?' சிவாவின் கண்ணோட்டம் வேறு மாதிரி இருந்தது. பல்வேறு கேள்விக் கணைகள் சிவாவின் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தன.
ஒருவாறாக, பேரம் படிந்து 630 ரூபாய் கொடுத்துவிட்டு, பெருமிதத்தோடு பைக்கில் அமர்ந்தான் அரவிந்த். சிவாவும் ஏறிிக் கொண்டான். சிவாவை வீட்டில் இறக்கிவிட்டு விட்டு, தன் வீட்டுக்கு விரைந்தான் அரவிந்த்.

மறுநாள். ஞாயிற்றுக்கிழமை! அலுவலக விஷயமாக ஏதோ ஒரு ஃபைலை வாங்கிச் செல்ல அரவிந்தின் வீட்டுக்கு வந்தான் சிவா. அரவிந்த், சோஃபாவில் சாய்ந்தபடி ஒவ்வொரு சேனலிலும் சலிக்காமல் டாப் 10 மூவீஸை பார்த்துக் கொண்டிருந்தான். வந்தவனுக்கு காபி தர மனைவியிடம் சொல்லிவிட்டு, ஃபைலைத் தேடிக் கொண்டிருந்தான்.


அப்போது, வாசலில் "கீரை வாங்கலியாம்மா?" என்று கீரைக்காரியின் குரல் உரக்கக் கேட்டது. ஃபைலை சிவாவின் கையில் கொடுத்துவிட்டு அரவிந்த் வெளியே வந்தான். "என்னம்மா, ரெண்டு மூணு நாளா ஆளைக் காணோம்," என்று உரிமையோடு விசாரித்தான். "பொண்ணுக்கு உடம்பு சரியில்லீங்க. ஆஸ்பத்திரிக்கு அலையவே நேரம் சரியாப் போச்சு," பெருமூச்சோடு சொன்னாள் அவள்.


"பொண்ணை உடம்பைப் பார்த்துக்கச் சொல்லும்மா. பத்தாவது படிக்கிறா இல்ல. நல்லா படிக்கச் சொல்லு," என்று அறிவுறுத்திவிட்டு, "சரி சரி, ரெண்டு கட்டு பொன்னாங்கன்னி கீரை கொடும்மா," என்றான்.


"கட்டு மூணு ரூபாய் சார்,'' என்றாள் கீரைக்காரி. உள்ளே வந்த அரவிந்த், சில்லரைகளைத் தேடி எடுத்து எட்டு ரூபாயை அவளிடம் நீட்டினான். 'நன்றி' என்பது போல் தீர்க்கமாக அவனைப் பார்த்துவிட்டு, "நல்லா இருங்கய்யா, வரேன்," என்று கிளம்பினாள்.


நடந்தவற்றை பார்த்துக் கொண்டே இருந்த சிவா,"அரவிந்த், பக்கத்துல நம்பிராஜன் சார் வீட்டு வரைக்கும் போகணும். நம்ம ரெண்டு பேரையும் வரச் சொன்னார். போலாமா?" என்றான். "ஓ! போகலாமே! நான் கூட கிளம்பலாம்னு தான் இருந்தேன்," பதிலளித்தான் அரவிந்த். உடைகளை மாற்றிக் கொண்டு,"காயத்ரி! வீட்டைப் பார்த்துக்கோம்மா," என்று மனைவியிடம் கூறிவிட்டு சிவாவுடன் புறப்பட்டான்.


"உங்க அப்பா செம்பாக்கத்துல இருக்கார் இல்ல. அங்க எல்லாம் 'லேண்ட் வேல்யூ' எப்படி இருக்கு?" வழக்கமாக இரண்டு, மூன்று குடும்பத் தலைவர்கள் சந்தித்தால் எந்த மாவை அரைப்பார்களோ, அதே மாவை அரைத்துக் கொண்டு இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.


திடீரென்று கல் இடறிக் கீழே விழப் போன அரவிந்தைத் தாங்கிப் பிடித்தான் சிவா. நல்ல வேளை, காயம் எதுவும் இல்லை. அரவிந்தின் செருப்பு மட்டும் பிய்ந்து அவனைப் பார்த்துப் பல்லிளித்தது. சற்றும் முற்றும் பார்த்ததில், சட்டையில் இருக்க வேண்டிய சுருக்கங்களை கன்னத்திலும் வயிற்றிலும் கொண்டு ஒரு பெரியவர் செருப்பு தைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். 'அது சரி, சட்டையில் எப்படி சுருக்கங்கள் இருக்கும்? அதில் ஒட்டுகள் மட்டுமல்லவா கண்ணுக்குத் தெரிந்தன!'


பிய்ந்த செருப்போடு, ஒருவாறாக சப்பாணி போல் நடந்து அவரிடம் வந்து சேர்ந்தான், அரவிந்த். செருப்பைத் தைக்கக் கொடுத்துவிட்டு சிவாவும் அரவிந்தும் பேசிக் கொண்டிருந்தனர். தைத்து முடித்ததும்,"ஐந்து ரூபாய்" என்று பேசக் கூட முடியாமல் விரலாலேயே சைகை காண்பித்தார் அந்த பெரியவர். பாவம்! இவன் தரப்போகும் பணத்தில் தான் அவர் காலை உணவையே சாப்பிட வெண்டுமோ என்னவோ?!


நன்றாக தைக்கப்பட்டிருக்கிறதா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டு காலில் அணிந்து கொண்டு, ஒரு பத்து ரூபாய்த் தாளை அவரிடம் நீட்டி,"வச்சிக்கங்க," என்றான் பாசத்தோடு. மிக உற்சாகமாக அவனுக்கொரு 'சலாம்' வைத்துவிட்டு அருகிலிருந்த டீக்கடைக்கு விரைந்தார் அந்தப் பெரியவர்.


தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சிவாவிடம், "ஏன் சிவா, தங்களையே நம்பாம பிச்சை எடுக்கிறவங்களுக்கு காசு தர்றதுக்கு பதிலா, இந்த மாதிரி ஆளுங்களுக்கு காசு கொடுக்கிறது உத்தமம், இல்ல?" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

அண்ணாச்சியிடம் மிச்சம் பிடித்த 70 ரூபாயில் மீதி 63 ரூபாய் என்னவாகும் என யோசித்தபடி, அரவிந்தை ஒருவித பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டே நடந்த சிவா மனதுக்குள் நினைத்தான்:

"இருப்பவர்களிடம் பிடுங்கி
இல்லாதவர்களிடம் பகிர்ந்தளிக்கும்
இவனும் ராபின்ஹூட் தானே!!!


1 comment:

  1. இருப்பவர்களிடம் பிடுங்கி
    இல்லாதவர்களிடம் பகிர்ந்தளிக்கும்
    இவனும் ராபின்ஹூட் தானே!!!

    intha style ippa illanu nineikiren.
    oru thathoovamo oru karuthoo solli kadahiya mudikirathu.varapathirikai sirukathai effect.
    varamalaril 6 varudangal mun ippadi than varum.

    "sattai"(jeyakanthan)-+2 sirukathaiyil varamathiri.ava ore robin hood appadinu mudichirukalam.

    ReplyDelete