Powered By Blogger

Tuesday, August 31, 2010

சிறுசேமிப்பு

சிறுசேமிப்பு
(2004)



வாட்டும் கோடையில் தகிக்கும் பாலையில்
காட்டுச் செடிகள் துளிர்க்கா மணலில்
குன்றினை முதுகில் ஏந்தி நடக்கும் - சேமிப்புக்கு
சான்றாய் வாழ்ந்து கிடக்கும் ஒட்டகமென்னும் உயரிய
விலங்கு, தன் உடலில் நீரை சேமிக்காவிடின்
நலவாழ்வு வாழ்வதும் இயலுமோ!

மானிடராய்ப் பிறந்த போதிலும் பற்றற்ற
ஞானியராய் வாழ்ந்து இறைவாழ்வே குறிக்கோளாய்
மறைசொல்லே மந்திரமாய் கொண்டோர் போல்
இனிய மலர்களில் அமைந்த மதுரமே குறிக்கோள்
என வாழும் தேனீக்கள் தேனை சேமிக்காவிடின்
அமிர்தம் ஒத்த தேனை சுவைக்க
அமரராகிய தேவர்க்கும் கூடுமோ!

இனிப்பை கண்டதும் தனித்து செல்லாது
அணி திரண்டு உணவைக் கொணரும்
'சீனி'வாசனாகிய எறும்பு தான் சேர்த்த
உணவை சேமிக்கா திருந்தால்
வேனில் முடிவில் வாழவும் முடியுமோ!

தன்வாழ்வும் வளமும் பெருகவும் - தான்பெற்ற
நன்மக்கள் வாழ்வு சிறக்கவும் - அனுதினமும்
அயராது உழைத்து ஈன்ற பொருளையும்
கயல்விழி கொண்ட மடவார் அலைந்து
திரிந்து கொணரும் நீரையும்; காற்றைக்கெடுக்கும்
கரிவாயுவை வெளிவிடினும் இன்வாழ்விற்கு உதவும்
எரிபொருளையும் சேமிக்காது வாழ்ந்தால்
சலசலப்பின்றி வாழும் பேறு
உலக மாந்தர் தமக்கு கிட்டுமோ?!

சேர்க்கும் செல்வம் சிறிதே எனினும்
சேமிக்கும் பழக்கம் நம்மில் வந்தால்
சோர்ந்து வாழும் அல்லல் இல்லை!

முகத்திற்கு ஒளியூட்டுவது சிரிப்பு!
அகத்திற்கு ஒளியூட்டுவது களிப்பு!
இருளுக்கு ஒளியூட்டுவது நெருப்பு! - தீபாவளி
இரவுக்கு ஒளியூட்டுவது மத்தாப்பூ!
உயிருக்கு ஒளியூட்டுவது இதயத்துடிப்பு!
உயர்வாழ்வுக்கு ஒளியூட்டுவது
சேமிப்பு!சேமிப்பு!சிறுசேமிப்பு!


No comments:

Post a Comment